திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த ‘வுல்ஃப்’ படத்தின் டீஸர் வெளியானது..!

ராய் லட்சுமி நடித்த ‘சிண்ட்ரெல்லா’ படத்தை இயக்கிய வினோ வெங்கடேஷ் இயக்கிய படம் ‘வுல்ஃப்’.இது பிரபுதேவாவின் 60-வது படம்.இந்தப்படத்தில் வசிஷ்டா என் சிம்ஹா, ராய் லட்சுமி, அஞ்சு குரியன், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்ரிஷ் இசையமைக்கிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் பற்றி வினோ வெங்கடேஷ் கூறியதாவது, இது வரலாற்றுக் காலத்தில் இருந்து இப்போது வரை பயணிக்கும் கதையை கொண்ட படம். ‘ஹிப்னாடிக் திரில்லர்’ வகை படம். ஹாலிவுட்டில் இது போன்ற கதைகள் வந்துள்ளன. தமிழில் உருவாவது இதுதான் முதன்முறை.
திகில் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். படத்தின் வில்லன் மற்றும் கதாநாயகன் இருவரும் ஓநாயின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பதுதான் கதையின் கரு. வழக்கமான படமாக இல்லாமல் புதிய அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.
விரைவில் படம் வெளியாக இருக்கிறது. பிரபு தேவாவுக்காக விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார். அந்தப் பாடல் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இவ்வாறு வினோ வெங்கடேஷ் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது.