லியோ படத்தால் தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை :திருப்பூர் சுப்ரமணியம் கருத்து..!

 
1

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அளித்த நேர்காணல் ஒன்றில், “லியோ படத்தால் தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத பங்கீட்டு தொகையை இந்தப் படத்துக்கு வாங்கி விட்டார்கள். நிறைய திரையரங்குகளில் படம் கடைசி நிமிடம் வரை திரையிடப்படுமா? என்ற சந்தேகம் இருந்தது. மிகவும் கசக்கி பிழிந்து தான் இந்தப் படத்தை திரையிட்டிருக்கிறார்கள். பெரும்பாலான திரையரங்குகள் படத்தை திரையிட ஆர்வம் காட்டவில்லை. அந்த அளவுக்கு அதிகமான பங்கீட்டு தொகையை கேட்டுள்ளனர்.

படம் லாபம் வசூலித்ததே தவிர, திரையரங்கைச் சேர்ந்தவர்களுக்கு பெரிய அளவில் எதுவும் கிடைக்கவில்லை. அதற்காக நஷ்டம் என சொல்லவில்லை. ஆனால், எங்களின் திரையரங்க பராமரிப்புக்கு இந்தப் பணம் நிச்சயம் பத்தாது. கேரளாவில் இதே படத்தை 60 சதவீத பங்கீட்டு தொகைக்கு ஒப்புகொண்டவர்கள், தமிழ்நாட்டில் 80 சதவீதத்தை வாங்கியிருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் 60 சதவீதம், கன்னியாகுமரியில் 80 சதவீதம் பங்கீட்டு தொகை என்றால் என்ன கணக்கு இது?.

தமிழ் திரையரங்கு உரிமையாளர்களிடம் ஒற்றுமை இல்லாததை பயன்படுத்திகொள்கிறார்கள். பெரும்பாலான திரையரங்கைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் படத்தை திரையிட விருப்பமே இல்லை. லியோவுடன் வேறு படம் வெளியாகியிருந்தால் இத்தனை திரையரங்குகள் கிடைத்திருக்காது. தற்போது வெளியாகியிருப்பதில் பாதி திரையரங்குகள் தான் கிடைத்திருக்கும். தீபாவளி வரை வேறு படம் இல்லை என்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்ததால் பல திரையரங்குகள் விருப்பமில்லாமல்தான் இப்படத்தைத் திரையிட்டனர்” எனக் கூறினார்.

From Around the web