என்னையும் உங்கள் சகோதரர் பிரேம்ஜி போல் நினைத்து ’தளபதி 68’ படத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் கசிந்து உள்ளதை ஏற்கனவே பார்த்தோம்.
விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காமெடி நடிகராகி தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’தளபதி 68’ படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என வெங்கட் பிரபுவுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தற்போது தான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பதால் காமெடி கேரக்டரில், சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்ற தகவல் வெளியாகி வருவது உண்மைக்கு புறம்பானது என்றும் தளபதி விஜய் உடன் இணைந்து நடிக்க வேண்டும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக தான் நான் சென்னை வந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
சதீஷின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு ’தளபதி 68’ படத்தில் வெங்கட் பிரபு வாய்ப்பு அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே தளபதி விஜய்யுடன் நடிகர் சதீஷ் ‘கத்தி’, ‘பைரவா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.