வெற்றிமாறன் - இளையராஜா - சூரி - விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் இதுதான்..!

 
வெற்றிமாறன் - இளையராஜா - சூரி - விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் இதுதான்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உருவாக தொடங்கிவிட்டது.

அசுரன் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை தொடங்கினார் வெற்றிமாறன். ஆனால் கொரோனா பிரச்னை மற்றும் தேதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றால் அந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. அதற்கிடையில் நடிகர் சூரியை முதன்மை கதாபாத்திரமாக வைத்து படத்தை உருவாக்குவதாக அறிவித்தார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரானது. சூரிக்கு ஜோடியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார்.

இந்த படம் மூலம் வெற்றிமாறனுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்துள்ளார் இளையராஜா. கோடம்பாக்கத்தில அவர் புதியதாக கட்டியுள்ள ஸ்டூடியோவில் இந்த படத்திற்கான பாடல் பதிவுகள் தொடங்கின. அப்போது வெற்றிமாறன் மற்றும் சூரி இருவரும் பாடல் பதிவு பணிகளை பார்வையிட்டு வந்தனர்.

மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் இல்லாத சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடத்தப்பட்டது. மேலும் ஊட்டியிலும் இந்த படத்தின் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெயின் அமைத்துள்ள நிலையில் ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தற்போது இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. சூரி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஏதோ ஒரு குற்றவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கைதியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். போஸ்டர் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் படத்திற்கு விடுதலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் நேரடியாக தயாராகும் இந்த படம் மற்ற மொழிகளிலும் தயாராகவுள்ளது. 

From Around the web