ஐந்து பெண்களின் பயணமே நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸ்...

பெரிய மருந்து நிறுவன குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் ராஜி (ஷாலினி பாண்டே) தனது பணிப்பெண் மாலாவுடன் (நிமிஷா சஞ்சயன்) டப்பாக்களில் உணவு செய்து அனுப்பும் வேலையை நடத்தி வருகிறார். ராஜியின் கணவர் மருந்து நிறுவனத்தில் சிறிய பணி செய்கிறார். அவர்களுக்கு ஜெர்மனி செல்வதே கனவு. மாலாவோ கணவர் இல்லாமல் மகளுடன் வாழ்கிறார். அவரது காதலன் மூலம் போதைப்பொருள் விற்பனை, டப்பா உணவு மூலம் தொடங்குகின்றனர்.
அவர்களுக்கு வீடு கிடைக்க வீட்டு தரகரிடம் பணியாற்றும் ஷாஹிதா (அஞ்சலி ஆனந்த்) பிளாட் கிடைக்க உதவி செய்து, அவரும் இந்த போதை விற்பனை வளையத்துக்குள் வருகிறார். மாலாவுக்கும் அவரது காதலனுக்கும் ஏற்பட்ட மோதலில் பல லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை வீணாகுவதால் சிக்கலில் மாட்டும் போது களத்தில் இறங்குகிறார் அமைதியாக வலம் வரும் ராஜியின் மாமியாரான ஷீலா (ஷபானா ஆஸ்மி).
ADVERTISEMENT
HinduTamil27thFebHinduTamil27thFeb
சிக்கலில் இருந்து மீட்கும்போது கிடைக்கும் பணத்தை பாதுகாக்க என்ன செய்வது என யோதிக்கும்போது மருந்து நிறுவன உயர் அதிகாரியின் மனைவியான வருணா (ஜோதிகா) நடத்தும் நிறுவனத்தின் பணச்சிக்கல் இருப்பதை அறிந்து, தங்களின் போதைப் பொருள் கருப்பு பணத்தை வெள்ளையாக்க ஐவரும் கூட்டணி அமைக்கின்றனர். அதன்பிறகு நடக்கும் ஆடுபுலி ஆட்டமே முதல் சீரிஸ்.
வீட்டில் சமைத்து உணவை டப்பாவில் வைத்து விநியோகிக்கும் பிசினஸில் ஆரம்பித்து, அதில் போதைப் பொருள் சந்தை, அதன் மறுபகுதியாக மருந்து நிறுவனத்தின் தில்லு முல்லு, அதை கண்டறிய வரும் நேர்மையான அதிகாரியும், அவருக்கு உதவும் பெண் கான்ஸ்டபிள் என சீரான வேகத்தில் சென்று வேகமெடுக்கிறது.
ஐந்து பெண்களின் கதாபாத்திரங்களில் திறமையானவர்களால் இயல்பான தளத்தை விட ஒரு படி மேலேயே காட்சிகள் அமைந்து விடுகிறது. இயக்குநர் ஹிதேஷ் பாட்டியா, ஐந்து பெண்களின் வாழ்க்கை அனுபவத்துக்கு முக்கியத்துவம் தந்து விரிவாக சீரிஸை வடிவமைத்துள்ளது சிறப்பு.
குறிப்பாக, கதாபாத்திர வடிவமைப்பில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாவது ஜோதிகாவின் பாத்திரப் படைப்புதான். உயர் பதவிக்கான வாய்ப்பு இருந்தும் கணவரால்தான் அவ்வாய்ப்பு பறிபோனதை அறியும்போதும், பணிபெண்களை மட்டமாக நடத்தும் உயர் வர்க்க பாங்கு, தன்நிலையை அதே பணிப்பெண்ணிடம் விவரிப்பது என நடிப்பில் அட்டகாசம் செய்கிறார்.
அதேபோல், போதைப் பொருள் பயன்படுத்துவது, புகை, மது அருந்துவது தொடங்கி வாயில் எப்போதும் வரும் கெட்டவார்த்தை என ஜோதிகா வலம் வருவது தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் ஆக இருக்கலாம். ஆனால், தன் கதாபாத்திரத்துக்கு அவர் நியாயம் செய்துள்ளார் என்ற விமர்சனக் கண்ணோட்டத்தில்தான் நாம் அணுக வேண்டும்.
ஷாலினி பாண்டேவும், நிமிஷா சஞ்சயனும்தான் படுவேகமாக ஸ்கோர் செய்கிறார்கள். அவர்களின் இயல்பான நடிப்பே சீரிஸை வேறு தளத்துக்கு கொண்டுசெல்கிறது. ஜோதிகாவுக்கும் நிமிஷாவுக்கும் ஏற்படும் மோதல்களும் அதகளம்.
ஷபானா ஆஸ்மி பாத்திரமும் "சூப்பர் ஸ்டார்" நடிகர்களுக்கு இணையாக வடிவமைத்துள்ளனர். அதிலும் அவர் குறைவைக்கவில்லை. நடிப்பில் வயதே இல்லை என அலட்டிக்கொள்ளாத நடிப்பை வாரிவழங்கிவிட்டார். மும்பையில் மழைகாலம், விநாயகர் சதுர்த்தி திருவிழா, ஆட்டோக்கள், டிராபிக், நிறுவனங்களின் செயல்பாடு, குடியிருப்பு வளாகம் என அனைத்தையும் ஒருங்கிணைத்திருப்பதே சாகசம்தான். முக்கியமாக இதில் வரும் ஆண் பாத்திரங்களே வில்லன்கள்.
நிமிஷாவின் காதலன், ஜோதிகாவின் கணவர் தொடங்கி பலரும் அவர்களுக்கு துரோகம் செய்யும் பாத்திரங்களாகவே வடிவமைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் விற்கும் முக்கியப் புள்ளிகள் ஆண்கள்தான். பெண்களும் போதை விற்பனை நோக்கி வருவதற்கு ஒரே காரணம் பணம். அதனால் அவர்களில் பலர் பாதிக்கும்போதும் பார்வையாளர்களை பாதிப்புக்குள்ளாக்கவில்லை என்பதே உண்மை.
திறமையான திரைக் கலைஞர்கள், சுவாரஸ்யமான திரைக்களம், த்ரில்லர் இருந்தும் கதை சொல்வதில் உள்ள சிக்கலால் மனதை ஆழமாக எட்டாமல் முதல் சீசன் செல்கிறது. ஐந்தரை மணி நேரம் செல்வதை கண்டிப்பாக குறைத்திருக்கலாம். திரைக்கதையில் கேள்விகள் எழும்பும் சூழல், ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கோடிட்டு காட்டுதல் இருந்தும் இரண்டாவது சீசன் பற்றி ‘ஹிண்ட்’ ஏதும் இல்லாமலே நிறைவடைந்துள்ளது டப்பா கார்டெல் முதல் சீசன். பெண்களை ப்ரொட்டாகனிஸ்டுகளாகக் கொண்டுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் நிச்சயம் ரசிகர்களுக்கு வித்தியாச அனுபவம் தரலாம்.