மற்றொரு மொழியில் ரீமேக்காகும் த்ரிஷயம்- 2: அப்செட்டில் தமிழ் திரையுலகம்..!

 
த்ரிஷயம் 2

மலையாளத்தில் வெளியாகும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற த்ரிஷ்யம் 2 திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தாக இந்தியில் ரீமேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷய்ம்’ வெற்றிக்கு பிறகு, அதனுடைய தொடர் இரண்டாவது பாகம் கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியானது. இந்த படம் இந்தியளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுவரை பல்வேறு மொழிகளில் தொடர் பாகங்களாக வெளியான படங்கள் பெரும் தோல்வியை மட்டுமே அடைந்துள்ளன. ஆனால் அந்த டிரெண்டை மாற்றி முதல் பாகத்தை காட்டிலும் வரவேற்பை குவித்தது த்ரிஷயம் -2.

இதை உடனடியாக தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் வெங்கடேஷ் வாங்கிவிட்டார். முன்னதாக தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷயம் முதல் பாகத்திலும் அவரே நடித்திருந்தார். தற்போது அந்த படத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்டது. அந்த படத்தையும் ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்திட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் த்ரிஷயம் 2 பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடைய முதல் பாகமும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது ரீமேக் செய்யப்படவுள்ள இரண்டாவது பாகத்திலும் அவர்களே நடிக்கவுள்ளனர். ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் குமார் மங்கத் பதக் வாங்கியுள்ளார்.

அதேசமயத்தில் த்ரிஷயம் 2 கன்னடத்தில் ‘த்ரிஷ்யா 2’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. பி. வாசு இந்த படத்தை இயக்கி வருகிறார். ரவிச்சந்திரன், நவ்யா நாயர், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கொரோனா பிரச்னையால் தற்போது அந்த படத்தின் ஷுட்டிங் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

த்ரிஷயம்-2 அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும் நிலையில், தமிழில் இந்த படம் எப்போது உருவாக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் பாகத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்த கமல்ஹாசன் அதற்கான பதிலை விரைவில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web