அசுரன் ரீமேக்கிற்கு முன்னதாகவே வெளியாகும் த்ரிஷயம் தெலுங்கு ரீமேக்..!

 
த்ரிஷ்யம் படக்குழு

கடந்த 2020-ம் ஆண்டே படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட ‘நாரப்பா’ திரைப்படத்திற்கு முன்பாகவே, இந்தாண்டு ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ள ‘த்ரிஷயம் - 2’ படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்ற ‘அசுரன்’ படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. தனுஷ் நடித்த வேடத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்துள்ளார்.

 கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில்வெளியான மலையாளப் படம் ‘த்ரிஷயம் 2’. மோகன்லால், மீனா, ஆஷா சரத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு தேசியளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து உடனடியாக தெலுங்கு உரிமையை கைப்பற்றிவிட்டார் வெங்கடேஷ். மலையாளத்தில் த்ரிஷயம் 2 படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தெலுங்கு பதிப்பையும் இயக்க ஆரம்பித்தார். வெறும் 45 நாட்களில் படப்பிடிப்பு தொடங்கி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக நாரப்பா படத்தை வெளியிட முடியாமல் போனது. இந்தாண்டும் கொரோனா பரவல் தொடர்வதால் அந்த படத்தின் வெளியீட்டை காலவரையின்றி படக்குழு தள்ளிவைத்துள்ளது.

தற்போது அதற்கு முன்னதாகவே ’த்ரிஷ்யம் 2’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் இந்த படத்தை வெளியிட உள்ளனர். எப்போது திரையரங்கு திறக்கப்படுகிறதோ அப்போது ‘நாரப்பா’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
 

From Around the web