பிரபல மிம்கிரி கலைஞர் கோவை குணா உயிரிழப்பு..!! ரசிகர்கள் இரங்கல்..!!
அசத்தப்போவது யாரு என்கிற பெயரில் தமிழில் ஒளிப்பரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கோவை குணா. மிம்கிரி கலைஞராக இருந்தபோதிலும், தனித்துவமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை டைமிங் மூலம் பெரியளவிலான ரசிகர் வட்டத்தை கவர்ந்தார்.
நடிகர் கவுண்டமணி போல மேடையில் மிம்கிரி செய்து தனித்துவமான அடையாளத்தை படைத்தவர் என்கிற பெருமை கோவை குணாவைச் சேரும். எந்தவொரு டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தனர்கள் என பலரும் அவரை கவுண்டமணி போல மிம்கிரி செய்யச் சொல்வது வழக்கம்.
இதுமட்டுமில்லாமல் சிவாஜி, ராதாரவி உள்ளிட்ட நடிகர்களின் குரல்களிலும் சிறப்பாக மிம்கிரி செய்து ரசிகர்களை மகிழ்விப்பார். இதுவரை பல்வேறு மேடை நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து பெரியளவில் பிரபலமானார். மேலும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார்.
கடந்த ஓராண்டாக கோவை குணா சிறுநீர் பிரச்னையால் அவதியுற்று வந்துள்ளார். இதற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இன்று அவருடைய இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், மேடைக் கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்கள், மிம்கிரி கலைஞர்கள் உள்ளிட்டோர் இரங்கல் கூறி வருகின்றனர். கடந்த மாதம் நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். அதற்குள் மற்றொரு பிரபல நகைச்சுவைக் கலைஞர் மறைந்துள்ள செய்தி ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.