”நாங்க எல்லாம் ட்ரம்பையே முடக்கனவங்க” கங்கனாவுக்கு ட்விட்டர் நிர்வாகம் அறிவுரை..!

 
நடிகை கங்கனா ரணாவத்

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த நடிகை கங்கனாவை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியதை அடுத்து, அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

உலகளவிலான மக்களுடன் தொடர்புகொள்வதற்கு சமூகவலைதளங்கள் பெரிதும் உதவி வருகின்றன. அதிலும் குறிப்பாக பொது வாழ்க்கையில் ஈடுபடும் முக்கியஸ்தர்களுக்கு சமூகவலைதளங்கள் பெரியளவில் பிரபலத்தை சேர்க்கின்றன.

இந்தியாவில் ட்விட்டரில் செயல்பட்டு வரும் பிரபலங்களில் கங்கனா ரணாவத் முக்கியத்துவம் பெறுகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் அவர் வெளியிடும் கருத்துக்கள் விவாத பொருளாகவும் மாறுகிறது. அதே சமயத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்துகிறது.

எனினும் அவருடைய பெரும்பாலான கருத்துக்கள் விமர்சனங்களை தான் பெற்றுள்ளன. கடந்த சில வாரங்களாகவே தனிநபர்கள் பற்றி அல்லது குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை குறித்து அவதூறாக பேசுவை வாடிக்கையாக வைத்திருந்தார் கங்கனா.

அதற்கு அவர் ஊடகங்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், அதை அவர் நிறுத்தவில்லை. குறிப்பாக கொரோனா பிரச்னையால் நாடே அவதிப்பட்டு வரும் சூழலில், “மரம் வளர்க்காததால் தான் நமக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்படி சிலிண்டரில் ஆக்சிஜனை அடைத்து வைத்துக்கொண்டே இருந்தால், அதனால் ஏற்படும் இயற்கை சமநிலையை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.

எவ்வித புரிதலுமின்றி அபத்தமாக அவர் பதிவிட்ட இந்த கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. நெட்டிசன்களிடையே ஆக்சிஜன் வாயுவை செயற்கையாக உருவாக்குவது குறித்து கங்கனா தெரிவித்திருந்த கருத்து நகைப்பை வரவழைத்தது. இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பங்கமாக அவர் கலாய் வாங்கினார்.

இப்படி பேசிக்கொண்டிருந்த அவர் மேற்கு வங்க தேர்தல் முடிவுகளை குறித்து பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் குஜராத் கலவரம் ஏற்பட்ட சமயத்தில் மோடி இருந்தது போன்று தற்போது மாற வேண்டும். அது மம்தா பானர்ஜிக்கு பதிலடியாக இருக்கும் என்று ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரிடம் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சமூக அமைதிக்கு தீங்கு ஏற்படுத்த முயற்சி செய்ததாக கூறி நடிகை கங்கனாவின் ட்விட்டர் பக்கத்தை அந்நிறுவனம் முடக்கிவிட்டுள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா, ட்விட்டர் இல்லாவிட்டாலும் பல்வேறு சமூகவலைதளங்களில் தொடர்ந்து செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.

கங்கனாவுக்கு ஆதரவு எழுந்த நிலையில், ட்விட்டர் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கணக்கையும் நாங்கள் முடக்கியுள்ளோம். சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால் நாங்கள் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. விதிமுறைகளை பின்பற்றி சமூவலைதளங்களில் செயல்படுவது தான் முறை. குறிப்பாக ட்விட்டரில் இருக்கும் பிரபலங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் கங்கனாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். 

From Around the web