முடிவுக்கு வந்தது வடிவேலு பிரச்னை- சமரசம் அடைந்தார் இயக்குநர் ஷங்கர்..!

 
வடிவேலு மற்றும் இயக்குநர் ஷங்கர்
நடிகர் வடிவேலு லைகா நிறுவனத்திற்கு வேறொரு புதிய படத்தில் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இம்சை அரசன் 24-ம் புலிலேசி பட பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்தது. இதையடுத்து 10 ஆண்டுகள் கழித்து இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை, இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற தலைப்பில் உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

முதல் பாகத்தை தயாரித்த இயக்குநர் ஷங்கர் இப்படத்தை முதல் பிரதி என்கிற அடிப்படையில் லைகா நிறுவனத்திற்கு தயாரித்து கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது. இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த சில நாட்களிலேயே படக்குழுவுக்கும் வடிவேலுவுக்கும் மோதல் வெடித்தது.

இதனால் அவர் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டு, படப்பிடிப்புக்கு செல்லாமல் இருந்தார். இதனால் பெரும் பொருட்செலவு நஷ்டமானதாக கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார்.

அப்போது முதல் இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை 4 ஆண்டுகளாக நீடித்து வந்தது. தயாரிப்பாளர் ஷங்கருக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வடிவேலு பொறுப்பேற்காததால், அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் மறைமுக தடை விதித்தது. இதையடுத்து வடிவேலுவால் எந்த படத்திலும் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் முடிவு காணப்பட்டுள்ளது. அதன்படி இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்திற்கு பதிலாக புதிய திரைப்படத்தில் லைகா நிறுவனத்திற்கு நடித்துக் கொடுப்பதாக வடிவேலு ஒப்புக்கொண்டார்.  இதன் காரணமாக இயக்குனர் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார்.

இதையடுத்து நடிகர் வடிவேலு தலைநகரம், மருதமலை,  படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். அதை தொடர்ந்து அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web