ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதன்முதலாக பாடல் பாடிய வடிவேலு..!!
தமிழில் இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை கலைஞர் என்றால் அது வடிவேலு தான். வெறும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமில்லாமல் ஹீரோ, குணச்சித்திர வேடங்களிலும் அவர் கலக்கி வருகிறார். பல ஆண்டு இடைவேளைக்கு பிறகு வடிவேலு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார். எனினும், முன்னர் போன்று இப்போது அவருக்கு நகைச்சுவை கதாபாத்திரம் பெரியளவில் கைக்கொடுக்கவில்லை.
இதனால் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதில் முதல் முயற்சியாக ‘மாமன்னன்’ படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஒருவேளை அது வில்லன் வேடமாக இருக்கலாம் என்று ஏற்கனவே கோல்வுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன.
வடிவேலு நடிப்பு மட்டுமில்லாமல் பாடல் பாடுவதிலும் வல்லவர். அவர் ஏற்கனவே இளையராஜா, தேவா, எஸ்.ஏ. ராஜ்குமார், ஹாரீஸ் ஜெயராஜ், ஸ்ரீகாந்த் தேவா, தேவி ஸ்ரீ பிரசாத், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா, சபேஷ் முரள், ஜி.வி. பிரகாஷ், டி. இமான், சந்தோஷ் நாராயணன் என தமிழ் சினிமா கொண்டாடும் அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் அவர் பாடல் பாடிவிட்டார்.
எனினும் இதுவரை ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மட்டும் பாடாமல் இருந்தார். தற்போது அந்த குறையும் நீங்கிவிட்டது. மாமன்னன் படத்திற்காக அவருடைய இசையில் வைகை புயல் தந்த சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
வடிவேலு, ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். வரும் ஜூன் மாதம் இந்த படம் வெளியாகிறது. அதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளிவரவுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.