சமந்தா நடித்துள்ள வெப் தொடரை தடை செய்ய வேண்டும்- வைகோ கடிதம்..!

 
தி ஃபேமிலி மேன் சீசன் 2

நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன் சீசன் 2’ வலை தொடரை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா ஆகியோருடைய நடிப்பில் உருவாகியுள்ள வலை தொடர் தி ஃபேமிலி மேன். கடந்த வாரம் இந்த தொடரின் டிரெய்லர் வெளியானது. அதை தொடர்ந்து சமந்தாவின் கதாபாத்திரம் அமைப்பு தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிரெய்லரில் சமந்தா இலங்கை தமிழ் பேசுகிறார். மேலும், போராளியாக நடித்துள்ளார். மேலும் தமிழர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி கண்டனக் குரல் எழுந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஃபேமிலி மேன் வலை தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழர்களை பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து வசனங்கள் இடம்பெற்றுள்ளத்தை தொடரின் டிரெய்லர் மூலம் அறிந்துகொண்டேன். விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அமேசான் ஓ.டி.டி தளத்தில் இந்த தொடர் ஒளிப்பரப்பானால் தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதனால் ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.

From Around the web