திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் - ’வணங்கான்’ திரை விமர்சனம்!
வணங்கான் படத்தில் அருண் விஜய், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார்.
இவர் தனது தங்கை மீது உயிரையே வைத்திருக்கிறார். மேலும் இவர் கன்னியாகுமரியில் இருக்கும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளின் காப்பகத்தில் பணியாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த காப்பகத்தில் வசிக்கும் இளம் பெண்கள் குளிப்பதை மூன்று நபர்கள் திருட்டுத்தனமாக எட்டிப் பார்க்கிறார்கள். அதில் இரண்டு பேரை அருண் விஜய் கொலை செய்கிறார். அதைத்தொடர்ந்து போலீசாரிடம் தானாகவே சரணடைகிறார்.
இருப்பினும் போலீசார் விசாரிக்கும் போது எதற்காக அந்த கொலையை செய்தேன் என்று சொல்ல மறுக்கிறார் அருண் விஜய். இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் வணங்கான் படத்தின் கதை. இந்த படத்தில் அருண் விஜய் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். அதாவது இயக்குனர் பாலா, எப்படி தன்னுடைய படங்களின் மூலம் ஒவ்வொரு நடிகருக்கும் முகவரியை தந்தாரோ அதேபோல் அருண் விஜயையும் வித்தியாசமான கோணத்தில் காட்டி அவரிடம் உள்ள அசாதாரணமான நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
அதன்படி ஒரு மாற்றுத்திறனாளியாக தனது உடல் மொழியை அப்படியே தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய். அதேபோல் சமுத்திரக்கனி, மிஸ்கின், ரோஷினி பிரகாஷ் ஆகியோரும் தனக்கான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கின்றனர். மேலும் பாலாவின் மற்ற படங்களில் இருப்பது போன்ற வன்முறை காட்சிகள் வணங்கான் படத்திலிருந்து இடம்பெற்றுள்ளது.
முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டாம் பாதிக்கான திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சி எஸ் ஆகியோரின் இசை திரையரங்கை அதிர வைத்துள்ளது. இருப்பினும் வணங்கான் படக் கதையின் மையக்கரும் இன்னும் ஆழமாக இருந்திருந்தால் ரசிகர்களை இன்னும் ஆழமாக கவர்ந்திருக்கும்.