கோலாகலமாக நடந்த வருண் தேஜ் - லாவண்யா திருமண நிச்சயதார்த்தம்..!!

பிரபல நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
 
varun tej

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகனுமான வருண் தேஜ் மற்றும் பிரபல திரைப்பட நடிகை லாவண்யா திரிபாதியின் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் விமர்சையாக நடந்தது.

தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. அதை தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான மாயவன் படத்திலும் நடித்திருந்தார். எனினும் இவர் அதிகளவில் தெலுங்குப் படங்களில் தான் நடித்துள்ளார்.

வருண் தேஜ் உடன் மட்டும் அவர் மிஸ்டர், அந்தாரிக்‌ஷம் ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். அப்போது இருவருக்குமிடையில் காதல் மலர்ந்ததாக தெரியவருகிறது. இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் பரவினாலும், இருவரும் பெரியளவில் அலட்டிக்கொள்ளவில்லை.

இந்நிலையில்  வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி காதலை உறுதி செய்து, அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. அதன்படி நேற்று இருவருக்கும் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

varun tej engagement

இந்நிகழ்வில் இருவருடைய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இவர்களுடைய திருமணம் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சமூகவலைதளங்களில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 
 

From Around the web