பிரம்மாண்டமாக நடைபெற்ற வருண் தேஜ், லாவண்யா திருமணம்..!

ஹைதராபாத்தில் சில மாதங்களுக்கு முன்பாக வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், தற்போது இத்தாலியில் ட்ரீம் வெட்டிங்கை இந்த நட்சத்திர ஜோடியினர் முடித்துள்ளனர்.
கோனிடேலா குடும்பத்தின் திருமணமான இதில், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களும் உறவினர்களுமான சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை மனதார வாழ்த்தி உள்ளனர். கோனிடேலா குடும்பம் மற்றும் ராம்சரண் மனைவியின் உபாசனாவின் காமினேனியின் குடும்பம் என ஒட்டுமொத்த டோலிவுட்டின் பெரிய குடும்பங்களும் இந்த திருமணத்துக்காக இத்தாலி சென்ற நிலையில், அங்கே குடும்பங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
அண்ணன் தம்பியான சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் இருவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில், ஒட்டுமொத்த டோலிவுட் ரசிகர்களும் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியை வாழ்த்தி வருகின்றனர்.
மேலும், ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் திருமண விழாவில் மாஸ் காட்டிய நிலையில், அவர்களது ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் #VarunLav ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். லாவண்யா திரிபாதி தமிழில் பிரம்மன், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்