இளையராஜா வீட்டில் இருந்து வரும் சினிமாவுக்கு அடுத்த வாரிசு..!!
தமிழ் சினிமாவின் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்கள் முதன்மையானவர் இளையராஜா. இவருடைய குடும்பத்தில் இருந்து ஏற்கனவே சகோதரர் கங்கை அமரன், மூத்த மகன் கார்த்திக் ராஜா, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி உள்ளிட்டோர் சினிமாவில் கால்பதித்துள்ளனர். அனைவருமே இசை மற்றும் நடிப்புத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கங்கை அமரனின் குடும்பத்தில் இருந்து மூத்த மகன் வெங்கட் பிரபு நடிகராக இருந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ளார். இவருடைய இளைய சகோதரர் பிரேம்ஜி பாடகராகவும் நடிகராகவும் உள்ளார். அதுமட்டுமின்றி கங்கை அமரனின் மகள் வாசுகி பாஸ்கரும் திரைப்படத்துறையில் முன்னணி ஆடை வடிவமைப்பாளராக இயங்கி வருகிறார்.
தற்போது இந்த வரிசையில் இளையராஜா வீட்டில் இருந்து மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் சினிமாவில் கால்பதிக்கிறார். அதன்படி இயக்குநர் வெங்கட் பிரபுவின் மகளான ஸ்ரீ ஷிவானி பாடலாசிரியராக அறிமுகமாகிறார். தெலுங்கு மற்றும் தமிழில் வெங்கட் பிரபு உருவாக்கி வரும் படம் கஸ்டடி. இந்த படத்தில் நாக சைத்தன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார்.
காவல்துறையை மையமாக கொண்டு இயங்கும் இந்த படத்தில், தமிழ் பதிப்புக்கான பாடலை ஸ்ரீ வாஷினி எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். விரைவில் இந்த படம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.