விஜயகாந்த்துக்கு 30 வருடங்கள் ஓட்டுநராக இருந்த வெங்கடேசன் பேட்டி..! 

 
1

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும், தமிழ்நாட்டையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது. அவர் உயிரிழந்த பிறகு அவருடனான நினைவுகளை பலரும் வெளிப்படுத்துகிறார்கள். அந்தவகையில் நடிகர் விஜயகாந்த்துக்கு 30 வருடங்கள் ஓட்டுநராக இருந்த வெங்கடேசன் அவருடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இப்ராஹிம் ராவுத்தர்தான் விஜயகாந்த்திடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். விஜயகாந்த் அவரிடம், என் டேஸ்டுக்கு இவன் கார் ஓட்டுவானா என கேட்டார். அதற்கு ராவுத்தரோ, உன் டேஸ்ட் எனக்கு தெரியாதா விஜயகாந்த். சரியா இருப்பான் என்று சொல்லி வேலைக்கு சேர்த்துவிட்டார்.

மீனாட்சி திருவிளையாடல் என்ற படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு தளத்துக்கு என்னை வேகமாக கார் ஓட்டி செல்ல சொன்னார். நான் டிரைவர் மட்டுமின்றி மெக்கானிக் வேலையும் செய்பவன். எனவே காரை வேகமாக ஓட்டி அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்த்தேன். அவருக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது. உடனே இப்ராஹிம் ராவுத்தரை தொடர்புகொண்டு டேய் இவன் சூப்பர் பையன் டா நானே வெச்சுக்குறேன் என்றார்.

அதற்கு பிறகு நான் அவருக்கு 30 வருடங்களாக டிரைவராக இருந்தேன். ஒருநாள்கூட என்னை அவர் ஓட்டுநர் போல் நடத்தியது இல்லை. வெளியே தங்கினால்கூட அவருடன் மெத்தையிலேயே என்னை படுத்துக்கொள்ள சொல்வார். அது வேண்டும் இது வேண்டும் என ஒருபோதும் அவரிடம் நான் கேட்டது இல்லை. எனக்கு என்ன தேவையோ அதையே அவர் பார்த்து பார்த்து செய்துகொடுத்துவிடுவார்.

விஜயகாந்த்துக்கு மதுப்பழக்கம் இருந்தது உண்மைதான். யாருக்குதான் அந்தப் பழக்கம் இல்லை. ஆனால் எல்லோரும் நினைப்பதுபோல் மதுவுக்கு அவர் அடிமை ஆகவில்லை. அவர் உடலை வருத்திக்கொண்டு சண்டை காட்சிகளில் நடிப்பார். அவர் போல் யாரும் நடிக்க முடியாது. தினமும் காலை எழுந்து உடற்பயிற்சி செய்வார். என்னை அழைத்து அவரின் காலை தூக்கி எனது நெற்றியில் படும்படி நிற்பார். அப்படி பயிற்சி செய்ததால் அவரால் அவ்வளவு சிறப்பாக சண்டை காட்சியில் நடிக்க முடிந்தது. அவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சொந்த அண்ணனை இழந்துவிட்டேன்" என்றார்.

From Around the web