பிரசாந்தின் அந்தகன் படத்தில் இணைந்த மூத்த நடிகை..!
 

 
பிரசாந்தின் அந்தகன் படத்தில் இணைந்த மூத்த நடிகை..!

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் நிலையில், தற்போது பிரபலமான மூத்த நடிகை ஒருவரும் அந்த படத்தில் இணைந்துள்ளார்.

பாலிவுட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான படம் ‘அந்தாதூன்’. ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே என பலரும் நடித்திருந்த இந்த படம் தேசியளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்தற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

தற்போது இந்த படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. அந்த வகையில் தமிழில் இந்த படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்குகிறார். அதில அவருடைய மகனும் நடிகருமான பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த நடிக்கிறார். அவருடன் சிம்ரன், கார்த்திக், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு லீலா சேம்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரான லீலா சேம்சன், மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் தலைவராக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் அறிமுகமான இவர் ஆதித்யா வர்மா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

லீலா சேம்சன் அந்தகன் படத்தில் சிம்ரன் வீட்டுக்கு எதிர் பிளாட்டில் குடியிருக்கும் பெண்மணியாக நடிக்கவுள்ளதாகவும், மிகவும் சுவாரஸ்யமான அதே சமயத்தில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

From Around the web