குஜராத் சினிமாவில் கால்பதிக்கும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா..!!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா குஜராத்தி திரையுலகில் கால்பதித்துள்ளனர். இருவரும் சேர்ந்து தயாரித்துள்ள ‘சுப் யாத்ரா’ படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளிவரவுள்ளது. 
 
shubh yatra

இயக்குநர் விக்னேஷ் மற்றும் அவருடைய மனைவி நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள குஜராத் மொழிப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘நானும் ரவுடி தான்’. மிகப்பெரியளவில் வசூல் சாதனை படைத்த இந்த படம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பாதை வகுத்து கொடுத்தது.

தாங்கள் ஒன்று சேருவதற்கு காரணமாக இருந்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் நினைவாக இருவரும் சேர்ந்து உருவாக்கிய பட தயாரிப்பு நிறுவனம் தான்  ‘ரவுடி பிக்சர்ஸ்’. ஏற்கனவே ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘கனெக்ட்’ போன்ற படங்கள் இந்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளன. 

இந்த வரிசையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ‘சுப் யாத்ரா’ என்கிற குஜராத்தி படத்தை தயாரித்துள்ளனர். தேசிய விருது வென்ற மனிஷ் சயினி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். மல்ஹார் தாக்கூர், மோனல் கஜார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 28-ம் தேதி வெளிவரவுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங்  நடிப்பில் வெளியான ‘ஆண்டன் கட்டளை’ படத்தின் குஜராத்தி ரீமேக் தான் ‘சுப் யாத்ரா’. இந்த படத்தின் விளம்பரப் பணிகளுக்காக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் குஜராத் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web