விஜய் ஆண்டனி மகள் மறைவிற்கு திரையுலக்கினர் இரங்கல்..!

 
1

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மீரா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது மீராவின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில்,” கனத்த இதயத்துடன் எழுதுவது. எனது அருமை நண்பர், தோழர் விஜய் ஆண்டனியின் மகள் இவ்வுலகை விட்டு திடீரென பிரிந்து சென்றது ஜீரணிக்க முடியாத செய்தியாகும். அன்புள்ள ராஜா, ஒரு நண்பனாகவும் சகோதரனாகவும் நான் உங்களுக்காக இருக்கிறேன். தைரியமாக இருங்கள். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. எந்த வார்த்தைகளாலும் உங்களை அமைதி படுத்தவோ சமாதானப்படுத்தவோ முடியாது. மொத்த குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோகத்தில் இருந்து நீங்கள் மீண்டு வர கடவுள் உங்களுக்கு போதுமான சக்தியை கொடுக்கட்டும். மீண்டும் ஒரு முறை இந்த வார்த்தைகளை வெறுமையான மனதுடன் விட்டு செல்கிறேன்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”அன்பு சகோதரர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா இறைவனடி சேர்ந்தார் எனும் தாங்க முடியாத துயர செய்தி அறிந்து மன வேதனையுற்றேன். தங்கையின் ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார். 

நடிகர் சிம்பு வெளியிட்ட இரங்கல் பதிவில், சகோதரர் விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட இழப்பை கேட்டு இதயம் நொறுங்கி விட்டது. அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். 

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் வெளியிட்ட இரங்கல் பதிவில், விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட இந்த கடினமான நிலை மனதை கடினமாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

இவர்களை தவிர நடிகர்கள் கார்த்திக், சித்தார்த், சதீஷ், சத்தியராஜ், சிபிராஜ், பார்த்திபன், பிரபுதேவா, சிம்பு, விஜய்யின் தாய் ஷோபா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் மிஷ்கின், நடிகை ரித்திகா சிங், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று மறைந்த விஜய் ஆண்டனியின் மகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

From Around the web