விஜய் சேதுபதியின் லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
விஜய் சேதுபதியின் லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘லாபம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயற்கை படம் இயக்குநராக அறிமுகமான எஸ்.பி. ஜனநாதன் அடுத்ததாக ஈ, பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு வெளியான பூலோகம் படத்திற்கு இவர் திரைக்கதை எழுதி இருந்தார்.

தமிழ் சினிமாவில் பொதுவுடமை கருத்துக்களை தன்னுடைய படங்களில் பதிவு செய்த இவர், கடந்த மார்ச் 14-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அப்போது விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
எஸ்.பி. ஜனநாதனின் திடீர் மரணம் திரையுலகத்தினரை அதிர்ச்சி அடையச் செய்தது. 

நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இரண்டும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில், தற்போது படத்திற்கான பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் மே 13-ம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படமும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் அந்த படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லாபம் படத்தின் ரிலீஸ் முடிவில் ஏதேனும் மாற்றம் வருமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

From Around the web