இனிமேல் 9 மணிக்கு ‘பாரதி கண்ணம்மா’ கிடையாது; இந்த சீரியல் தான்..!!
தமிழ்த் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பாரதி கண்ணம்மா முதல் சீரியலுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அது முடிந்தவுடன், பாரதி கண்ணம்மா சீசன் 2 துவங்கப்பட்டது. முந்தைய சீசனில் நடித்த வினுஷா தேவி, தற்போதைய சீசனிலும் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
ஆனால் பாரதி கதாபாத்திரத்தில் முந்தைய சீசனில் நடித்த அருண் பிரசாத், மாற்றப்பட்டு இரண்டாவது சீசனில் சிப்பு சூரியன் நடித்து வருகிறார். இந்த சீரியல் விஜய் டிவி-யில் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆனால் முந்தைய சீசன் அளவுக்கு புதிய சீசன் வரவேற்பு பெறவில்லை.
பொதுவாக ஒரு சீரியலை பின்பற்றி, அதனுடைய இரண்டாவது சீசனாக ஒளிப்பரப்பாகும் எந்த சீரியல்களும் வரவேற்பு பெறுவது கிடையாது. சித்தி- 2, ராஜா ராணி- 2 போன்றவை சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. இரண்டாவது சீசன் என்று கூறிவிட்டு, முந்தைய தயாரிப்புகளின் பெயரை கெடுத்தது தான் மிச்சம்.
அந்த சாதனையை பாரதி கண்ணம்மா சீசன் 2-வும் தொடர்ந்து வருகிறது. இதனால் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலின் ஒளிப்பரப்பு நேரத்தை மாற்றி உள்ளது. இதுவரை இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வந்த ‘சிறகடிக்க ஆசை’ தொடர் 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வந்த ‘பாரதி கண்ணம்மா சீசன் 2’, இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது. அதேபோல இதுவரை இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகி வந்த ‘மகாநதி’, இனி 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது. பாரதி கண்ணம்மா 2 சீரியலுக்கு வரவேற்பு குறைந்த நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.