விஜய் கட்சியின் முதல் மாநாடு - செப்டம்பர் 23-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் தீவிரம்..!
நடிகர் விஜய். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்து வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்துவிட்டார்.
கட்சி பெயர் அறிவிச்சாச்சு, கொடியையும் அறிமுகப்படுத்தியாச்சு, கட்சி பாடலையும் வெளியிட்டார். கொடி விளக்கம், கட்சியின் கொள்கை உள்ளிட்ட மற்ற நோக்கங்களை அறிவிக்க மாநாடு அவசியம் என்பதால் அதற்கான வேலைகளில் நடிகர் விஜய் இறங்கி வருகிறார். அதற்குள் அவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார், யார் சொல்லி கட்சியை ஆரம்பித்து இருக்கிறார், சீமானுடன் கூட்டணி என்று பலர் ஹேஷ்யங்களை கூறி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்ய விஜய் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்பட்டது. அங்கு இடம் அமையாத நிலையில், விக்கிரவாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது செப்டம்பர் 23ம் தேதி கட்சியின் முதல் மாநாடு என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டது. மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடக்கிறது. முதல் மாநாடு; அனைத்தையும் எவ்வித சிக்கலும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதால் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட பலரும் கவனத்துடன் செயல்படுகின்றனர்.
மாநாட்டுக்கு அனுமதி கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் முதல் நடவடிக்கையாக முறைப்படி மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் அளித்துள்ளார். அவர் மனு கொடுக்கச் சென்ற போது எஸ்.பி., அங்கு இல்லை. இதனால் ஏ.டி.எஸ்.பி., திருமாலிடம் மனு அளித்துள்ளார். மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது; செப்டம்பர் 23ம் தேதி வி. சாலையில் உள்ள கிராமத்தில் மாநாடு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வேண்டும். 85 ஏக்கரில் மாநாடு நடத்துவதற்கான இடமும், வலது,இடது புறங்களில் வாகனங்களில் நிறுத்துவதற்கான இடமும் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் என்பது தற்போது தொடங்கி உள்ளதால் கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பாகி உள்ளனர். மாவட்டம்தோறும் எத்தனை பேரை அழைத்து வருவது, எத்தனை வாகனங்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள், ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பது என ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளனர்.