’கே.ஜி.எஃப்’ படத்தை தட்டித்தூக்கும் ’தங்கலான்’ மேக்கிங்..!!
நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நடிப்பில் உருவாகி வரும் படங்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிடப்பட்டன. அதன்படி கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கி வரும் ‘தங்கலான்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களை மையப்படுத்திய படமாக தயாராகி வருகிறது.
நேரடியாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே தங்கலான் படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விக்ரம் தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதை முன்னிட்டு படக்குழு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. மிகவும் மிரட்டலாகவும் பிரமாண்டமாகவும் இந்த மேக்கிங் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக விக்ரம் எடுத்துள்ள ரிஸ்க் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.