பவர்ஃபுல்லான ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஒரு வலம் வந்த விஷால் கதாநாயகி..!

 
பவர்ஃபுல்லான ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஒரு வலம் வந்த விஷால் கதாநாயகி..!

பதினைந்து ஆண்டுகள் கழித்து பைக் ஓட்டினாலும் எதுவும் மறக்கவில்லை என நடிகை மம்தா மோகன்தாஸ் சமூகவலைதளத்தில் உற்சாகம் பொங்க பதிவிட்டுள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த  மம்தா மோகன்தாஸ் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். எனினும் மலையாளப் படங்களுக்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தார்.

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒன்றாக உருவாக்கப்பட்டு வரும் ‘லால்பாக்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடித்த போது ஹார்லி டேவிட்சன் பைக்கை ஓட்டியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மம்தா,

“சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு பைக் ஓட்டுகிறேன். இத்தனை ஆண்டுகள் கழித்து பைக்கை ஓட்டிய போதும் எனக்கு நன்றாக ஓட்ட வந்தது. சொந்தமாக வாகனம் வைத்திருந்தாலும் அதை ஓட்டுவதற்கு இன்னொருவரை சார்ந்து இருக்க வேண்டும். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சிறிய விஷயங்களின் மீது நமக்கு இருக்கும் ஆசையை நிறைவேற்றிக்கொள்வது கொஞ்சம் கடினம். பெங்களூரில் இருந்த நாட்கள் அளப்பரியது” என மம்தா தெரிவித்துள்ளார்.

தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்யா, விஷால் இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தில் மம்தா மோகன்தாஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஆர்யா நடிக்கிறார். கொரோனா பிரச்னை முடிவடைந்த பிறகு அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. 


 

From Around the web