என்னப்பா சொல்றீங்க..! சிகிச்சைக்காக 25 கோடி கடன் நான் வாங்கினேனா?
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது விஜய்தேவரகொண்டா ஜோடியாக குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் தமிழ் மொழியிலும் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. சமந்தா இந்தி வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார்.ஏற்கனவே சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. இதனையடுத்து சினிமாவில் இருந்து ஒரு வருடம் ஓய்வெடுக்க உள்ளார்.
தற்போது இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் விடுமுறையை அனுபவித்து வரும் சமந்தா, விரைவில் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுக்க உள்ளார். பூரண குணமடைந்த பின்னர் இந்தியா திரும்ப உள்ளார். ஆனால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளார்.
இந்நிலையில், சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகரிடம் சமந்தா ரூ.25 கோடி கடன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலுக்கு நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டுள்ள நடிகை சமந்தா, “மயோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? தவறான தகவலை உங்களுக்கு கொடுத்துள்ளனர். ஒரு சிறிய தொகையை நான் எனக்காக செலவு செய்ததில் மகிழ்ச்சியே.
என் சிகிச்சைக்காக நான் மற்றவர்களிடம் பணம் பெறவில்லை. என்னுடைய துறையில் நான் என் வேலைகள் மூலம் அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால், என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். நன்றி.
மயோசிடிஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிகிச்சை தொடர்பாக செய்திகள் வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.