’777 சார்லி’ படத்தில் என்னதான் இருக்கு..? ப்ரித்விராஜை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ்..!

 
777 சார்லி

கன்னட சினிமாவில் உருவாக்கப்பட்டுள்ள ‘777 சார்லி’ படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை நடிகர் ப்ரித்விராஜ் கைப்பற்றியுள்ளதை அடுத்து தமிழ் வெளியீட்டுக்கான உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வாங்கியுள்ளார்.

கன்னட மொழியில் ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘777 சார்லி’. முழுக்க நகைச்சுவைப் படமாக தயாராகியுள்ள இந்த படம் சார்லி என்கிற நாயை மையப்படுத்தி உருவாகியுள்ளது. மேலும் தேசிய விருது வென்ற பாபி சிம்ஹா இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது பாபி சிம்ஹா நடிக்கும் முதல் கன்னடப் படமாகும். கிரண்ராஜ் இயக்கியுள்ள இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே எதிர்பார்ப்புகளை எகிறவைத்துள்ளது. அதனால் இந்த படம் கன்னடத்தில் நேரடியாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை நடிகர் ப்ரித்விராஜ் சொந்தமாக்கினார். முன்னதாக நாடு முழுவதும் வரவேற்புப் பெற்ற கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு உரிமையையும் இவர்தான் கைப்பற்றியுள்ளார்.

அதை தொடர்ந்து மலையாள திரையுலக ரசிகர்களிடையே இதற்கான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தற்போது அதே எதிர்பார்ப்பு ‘777 சார்லி’ படத்தின் மீதும் திரும்பியுள்ளது. இதற்கிடையில் தமிழக வெளியீட்டு உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள கார்த்தி சுப்பராஜ், சார்லி நல்ல படம். நிபந்தனையற்ற அன்பு தான் இந்த படத்தின் மையக் கருத்து. தமிழில் இந்த படத்தை வெளியிடுவதில் மிகவும் பெருமை அடைகிறேன் என அவர் கூறியுள்ளார்.

From Around the web