என்னாச்சு..? ‘மார்கோ’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை ..!

2024-ம் ஆண்டு இறுதியில் மலையாளத்தில் வெளியான படம் ‘மார்கோ’. இதன் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் சர்ச்சையையும் உருவாக்கியது. மேலும், இதர மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.
பிப்ரவரி 14-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது ‘மார்கோ’. தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இது தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உகந்த படமல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும், ஓடிடி தளத்தில் இருந்து இப்படத்தை நீக்க வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம், ரத்தம் தெறிக்கும் காட்சியமைப்புகளால் இந்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. ஹனிஃப் அதேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் உன்னி முகுந்தன் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.