பிரைவேட் ஜெட் விமானம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா ?

அமிதாப் பச்சன் தொடங்கி நயன்தாரா வரை பிரைவேட் ஜெட் வைத்துள்ளனர். பிரைவேட் ஜெட் வாங்கும் இந்த ட்ரெண்ட் தற்போது அதிகமாகி வந்தாலும் இந்திய அளவில் முதல்முறையாக பிரைவேட் ஜெட் வாங்கியது ஒரு நடிகை. அதுவும் தமிழ் நடிகை.
அவர் தமிழ் சினிமாவின் புன்னகை அரசி கே.ஆர். விஜயா. தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் 1960, 70களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கே.ஆர். விஜயா. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார்.
கே.ஆர்.விஜயாவின் பூர்வீகம் பிறந்ததும் வளர்ந்ததும் சென்னையில் தான். அவரது தந்தை ராமச்சந்திர நாயர் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் நடித்தவர். மூத்த மகள் தெய்வானையை நடிகையாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, 1963 இல் அதனை சாதித்தார். தெய்வானை கே.ஆர்.விஜயா என்ற பெயரில் கற்பகம் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
அந்தப் படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த கற்பகம் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. 22 வருடங்கள் கழித்து, 1985 இல் அதே கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் தனது 200 வது படம் படிக்காத பண்ணையாரில் கே.ஆர்.விஜயா நடித்தார். அதுவும் ஹிட்டாகி அவருக்கு பேர் வாங்கித் தந்தது.
மிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது அசாத்திய நடிப்பால் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் கே.ஆர்.விஜயா. புன்னகை அரசி என்றழைக்கப்பட்ட கே.ஆர்.விஜயா குறுகிய காலகட்டத்தில் முன்னணி டாப் நடிகையாக, தென்னிந்திய மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 10 படங்களாவது திரையரங்குகளில் வெளியாகுமாம். அந்த காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆருக்கு நிகராக சம்பளம் வாங்கிய நடிகை இவர்.
குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை கதைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து நடித்து வந்த கே.ஆர். விஜயா சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது 1966 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பின் நடிப்புக்கு முழுக்குப்போட்ட நடிகை கே.ஆர். விஜயா மீண்டும் கணவரின் அனுமதியுடன் மீண்டும் நடிக்கத் தொடங்கிய அவர் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
இதற்கிடையே கே.ஆர். விஜயா பற்றி தெரியாத முகம் ஒன்றும் இருக்கிறது. அது கோடீஸ்வர நடிகை என்பது தான். அவரின் சுதர்சன் வேலாயுதம் நாயர் பிரபல தொழிலதிபர். சுதர்சன் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம் நடத்தி வந்த அவருக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் பல நட்சத்திர ஓட்டல்களும் வேலாயுதம் நாயருக்கு இருந்துள்ளன. இவரும் படங்களை தயாரித்துள்ளார்.
சில மாதங்கள் பேட்டியளித்த கே.ஆர். விஜயாவின் தங்கையும் நடிகையுமான கே.ஆர். வத்சலா தனது சகோதரி பற்றி பல தகவல்களை தெரிவித்தார். அதில், கே.ஆர். விஜயா பிசியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஷூட்டிங் சென்று வருவதற்காக சொந்தமாக விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இது தவிர நான்கு கப்பல்களை சொந்தமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
இதன்மூலம் தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே முதன்முதலாக பிரைவேட் ஜெட் மற்றும் கப்பல் வைத்திருந்த முதல் நடிகை என்ற பெருமையை கே.ஆர். விஜயா. அது மட்டுமில்லாமல், தற்போது பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு பைக்கை, 70 களிலேயே ஒட்டி அசத்தியவரும் கே.ஆர். விஜயா தான். இந்தப் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.