யார் வீட்டு நிகழ்ச்சிக்கும் செல்லாத அஜித், பி.வி.சிந்து கல்யாணத்திற்கு சென்றது ஏன்?
தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். பிரபலமான நடிகராக இருந்தாலும், பிரைவசியை விரும்பும் மனிதரான இவர், ஷூட்டிங் சமயத்தை தவிர பெரும்பாலான நேரங்களில் கேமராக்களை தவிர்ப்பார். இதன் காரணமாகவே, தான் நடிக்கும் ப்ரமோஷன் விழாக்களில் கூட கலந்து கொள்ளாமல் இருக்கிறார். இவ்வளவு ஏன், நெருங்கிய திரை பிரபலங்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் கூட இவர் செல்வதில்லை. தனது மனைவி மற்றும் குழந்தைகளையே அனுப்பி வைப்பார். ஆனால், சமீபத்தில் நடந்த பி.வி.சிந்துவின் திருமணத்தில் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து, கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தனது பல வருட காதலை வெங்கட தத்தா சாய்-ஐ திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு 24ஆம் தேதி ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலனி ஆகியோர் தங்களின் இரு குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. நடிகர் அஜித்குமார் ட்ரிம் செய்யப்பட்ட தாடி, வெள்ளை முடியில் கோட்-சூட் போட்டு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதைப்பார்த்து தமிழ் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போயினர். காரணம், தமிழ் திரையுலகில் உள்ள எத்தனையோ பிரபலங்களின் திருமண விழாக்களை புறக்கணித்த அஜித், பி.வி.சிந்துவின் திருமணத்தில் மட்டும் கலந்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து தற்போது இணையத்தில் ஒரு செய்து வைரலாகி வருகிறது.
ஷாலினியை, நமக்கு நடிகையாக தெரியும், பின்னர் அஜித்தின் மனைவியாக தெரியும். ஆனால், அவர் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை என்பது உங்களுக்கு தெரியுமா? 44 வயதாகும் ஷாலினி, இளமையாக இருந்த காலத்தில் நன்றாக பேட்மிண்டன் விளையாடுவாராம். அந்த பழக்கத்தை இப்போதும் அவர் விடாமல் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு பி.வி.சிந்துவின் தொடர்பும் கிடைத்திருக்கிறது. அப்படியே இருவரும் தோழிகளாக மாறிவிட்டனராம். தன் மனைவியின் மீதுள்ள அன்பின் பேரில், நடிகர் அஜித் பி.வி.சிந்துவின் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
நடிகர் அஜித்குமார் தன் பட விழாக்களில் கலந்து கொள்ளாதது குறித்து எப்போதும் ரசிகர்கள் குறை கூறுவதுண்டு. அவர், சில திரை பிரபலங்களின் இறப்பில் கூட கலந்து கொள்ளவில்லை. இதனால், சமயம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் அதனை குத்திக்காண்பித்து கொண்டிருக்கின்றனர். கடந்த விஜயகாந்த் உயிரிழந்த போது, அவரது இறுதி சடங்களில் கலந்து கொள்ள அஜித் வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இப்போது இவர் பி.வி.சிந்துவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டதை பார்த்த ரசிகர்கள், “விஜயகாந்தின் இறுதி சடங்கிற்கு வரமுடியவில்லை, இதில் மட்டும் கலந்து கொள்ள முடிகிறதா?” என்று கேட்டு வருகின்றனர்.