நான் ஏன் ஓட்டு போட சைக்கிளில் சென்றேன் - நடிகர் விஷால் பதில்..!

 
1

சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில், நடிகர் விஷால் நடித்த ரத்னம் திரைப்பட குழுவின் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இயக்குனர் ஹரி மற்றும் நடிகர்கள் விஷால் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களிடையே நடிகர் விஷால் பேசியதாவது: ஒவ்வொரு 8 வருடம் கழித்து இயக்குநர் ஹரி படத்தில் நடிக்கிறேன். தற்போது அவர் மிகவும் அப்டேட் ஆகிவிட்டார். இதற்கு முன்பாக மார்க் ஆண்டனி படத்தில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று பலர் கூறினார்கள். ஆனால் நம்பிக்கையுடன் நடித்து படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

நாடாளுமன்ற தேர்தலில் சேலத்தில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. நடிகர் சங்க தேர்தலின்போது நான் சேலத்தில் காலை வைத்தால், எனது காலை வெட்டுவேன் என்றார்கள். இளைஞர்கள் நினைத்தால் மாற்றம் நிச்சயம். இந்த ஆண்டு டிசம்பருக்குள் திருமணம் செய்ய உள்ளேன். நடிகர் சங்கத்தில் சாக்கடை போன்ற கெட்டவர்களை வெளியே அனுப்பிவிட்டு, நல்லவர்களை மட்டும்தான் உள்ளே வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக மாணவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய விஷால்,‘நடிகருக்கு வெற்றி என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் உங்களை போலவே எனக்கும் விஜய் மீது இன்ஸ்பிரேசன்தான். ஓட்டு போட விஜய்யை பார்த்து சைக்கிளிலில் செல்லவில்லை. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிடம் மட்டும்தான் வண்டி உள்ளது.

தற்போதுள்ள சாலையின் நிலை, போக்குவரத்து நெரிசலில் வண்டியில் போவது கஷ்டம் என்பதால், ஓட்டு போட சைக்கிளில் சென்றேன்,’’ என்றார். தொடர்ந்து நிருபர்களிடம் விஷால் கூறுகையில், ‘‘வருகிற 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன். கூட்டணி, சீட்டுகள் ஒதுக்கீடு என்பதை யோசிக்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சி தொடங்கி செயல்பட வேண்டும். என்னை அரசியலுக்கு வர விடாதீர்கள். அரசியல் கட்சியினர் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் நாங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுவோம். நீங்கள் நல்லது செய்துவிட்டால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டு அரசியலுக்கு வருகிறோம். நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து, பொதுக்குழுதான் முடிவெடுக்க முடியும்,’’ என்றார்.

From Around the web