ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை... பண்ருட்டி அருகே நண்பர்களே கொன்ற கொடூரம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்தி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ டிரைவரான இவர், தட்டாஞ்சாவடி காளி கோவில் பின்புறம் உள்ள சுடுகாட்டில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, கள்ளக்காதல் தொடர்பான விவகாரத்தில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில், நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சக்திவேலை கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக நண்பர்கள் சுமன் மற்றும் அவரது நண்பரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டோ டிரைவர் சக்திவேலுக்கும் அவரது நண்பர் சுமனுக்கும் கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆட்டோ டிரைவர் சக்திவேல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி சக்திவேலின் உறவினர்கள் பண்ருட்டி - சேலம் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்த பிறகு உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது