சாலையை கடந்த போது நேர்ந்த சோகம்! லாரி மோதி சிறுவன் பலி...!!
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள காரக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரன். இவரது மகன் அகல்யன் (17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தான். இந்த நிலையில் நேற்று அகல்யன், ஸ்கூட்டரில் மன்னார்குடி- தஞ்சாவூர் மெயின் ரோட்டில் எடகீழையூர் பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்றான்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அகல்யன் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அகல்யனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிறுவன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் சதீஷ் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த அகல்யனின் உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.