மாறிப்போன உடல்... தகனம் செய்த உறவினர்கள்..!

 
மாறிப்போன உடல்... தகனம் செய்த உறவினர்கள்..!

சிகிச்சை பலனின்றி இறந்தவரின் உடலை மாற்றி கொடுத்துவிட்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 71 வயதான அய்யாவு, வத்தலக்குண்டு பேருந்து நிலையம் அருகே செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். உடல்நலக்குறைவால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் அய்யாவு. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. ஆனால் பிணவறையில் அய்யாவு உடல் இல்லாதது கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெரியகுளம் அருகேவுள்ள இ.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராமுவின் உடலுக்கு பதிலாக அய்யாவுவின் உடல் அந்த உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டதும், அதை தொடர்ந்து அவர்கள் இறுதி காரியம் செய்து உடலை தகனம் செய்ததும் தெரியவந்தது.

இது அய்யாவு குடும்பத்தினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தேனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். 

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய உறவினர்களில் ஒருவர், மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி.சங்கரன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தனர். 

From Around the web