கோவையில் கொல்லப்பட்ட காகங்கள்- பிரியாணிக்காகவா..?
கோவையில சுமார் 20-க்கும் மேற்பட்ட காகங்களை விஷப்பொடி தூவி கொலை செய்துவந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாசியை அடுத்துள்ள பெரிய கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய விவசாய நிலங்கள் உட்பட, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் இறந்து கிடந்துள்ளன. சிறிது நேரத்துக்கு பிறகு இறந்துபோன காகங்களின் சடலங்கள் காணாமல் போயுள்ளன.
இதனால் சந்தேகமடைந்த அவர், தனது தோட்டப் பகுதியை சுற்றி பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் இறந்துபோன காகங்களை தனது சாக்குப் பையில் போட்டு வந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் உதவியுடன் நாகராஜ் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காகங்களை கொன்று, உடலை சேகரித்து வந்தவர் சிஞ்சுவாடி என்கிற கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (37) என்று தெரியவந்தது. அவர் வைத்திருந்த சாக்குப் பையை சோதித்த போது, சுமார் 20-க்கும் மேற்பட்ட காகங்களின் உடல் இருந்தன.
அதுதொடர்பாக சூர்யாவிடம் போலீசார் விசாரித்த போது, வெண்படை நோய் பாதிப்பை குணப்படுத்த காகங்களை கொன்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் கோவையில் பல பிரியாணி கடைகளுக்கு சப்ளை செய்யவே சூர்யா காகங்களை கொன்று வந்ததாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குற்றச்செயலில் ஈடுபட்ட சூர்யாவை கைது செய்த போலீசார், அவரிடம் பல்வேறு கோணாங்களில் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.