தொடரும் அவலம்..!! மீண்டும் ஒரு பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை..!

 
1

அந்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - லட்சுமி தம்பதி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரமேஷ், அந்தியூர் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். லட்சுமி, ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார்.

இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் ரேகா (17) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அந்தியூர் அரசுப் பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 8 மணி அளவில் மார்க்கெட் வியாபாரத்துக்கு சென்றிருந்த தாய் லட்சுமிக்கு போன் செய்த ரேகா, “என் ஃப்ரெண்ட் கவிதாவோட (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அம்மா செல்வி என்னை கண்டபடி கெட்ட வார்த்தையால பேசிட்டாங்க. என்னால தாங்கிக்கவே முடியல. நான் எந்தத் தப்பும் செய்யலை” என அழுதிருக்கிறார். இதைக் கேட்ட தாய் லட்சுமி, “நீ அழாதே. நான் காலையில வீட்டுக்கு வந்ததும் அவங்ககிட்ட என்ன பிரச்னைன்னு விசாரிக்கிறேன்" என ஆறுதல் சொல்லி போனை வைத்திருக்கிறார்.

சில நிமிடங்களிலேயே, ரேகா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக லட்சுமிக்கு அவர் உறவினர்கள் போன் செய்து சொல்லியிருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ந்துபோன லட்சுமி உடனடியாக வீட்டுக்கு விரைந்திருக்கிறார்.

தகவலறிந்து வெள்ளித்திருப்பூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்துகொண்ட ரேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ரேகாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட ரேகாவும், கவிதா என்ற பெண்ணும் பள்ளித் தோழிகள். உறவினர்களும்கூட. கடந்த சில நாட்களாகவே கவிதாவின் செல்போனுக்கு இளைஞர்கள் சிலர் தொடர்ச்சியாக போன் செய்து தொந்தரவு கொடுத்திருக்கின்றனர்.

இது தெரிந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு போன் செய்த கவிதாவின் தாயார் செல்வி, “என் மகளோட நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது?" எனக் கடுமையாகப் பேசியிருக்கிறார். அதற்கு அந்த இளைஞர்களோ, “ரேகாதான் எங்களுக்கு உங்க பொண்ணோட நம்பரைக் கொடுத்தா!" என்றிருக்கின்றனர்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த செல்வி, “எதுக்காக என் பொண்ணோட நம்பரை பசங்க கிட்ட தேவையில்லாம கொடுத்தே" என ரேகாவை கண்டபடி திட்டியிருக்கிறார். இதில் மனமுடைந்த ரேகா என்ன செய்வதெனத் தெரியாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, மாணவி ரேகா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, “தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித், அருண், தினேஷ் ஆகிய மூவரும்தான் என் இறப்புக்கு காரணம்” எனக் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறார். அதைக் கைப்பற்றியிருக்கும் போலீசார் அந்த நபர்கள் யார் என்பது குறித்தும், ரேகாவின் தற்கொலைக்கு வேறு யாரெல்லாம் காரணம் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

From Around the web