ஹோட்டல் ஊழியரை அடித்து கொன்ற நண்பர்கள்... பண்ருட்டி அருகே பகீர் சம்பவம்!
 

 
1

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் சிவக்கொழுந்து (34). இவர் காடாம்புலியூரில் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு அதே ஊரை சேர்ந்த நண்பர்களான அபினேஷ் (21), கார்மேகம் (20) ஆகியோருடன் காட்டாண்டிக்குப்பம் அய்யனார் கோவில் அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். 

அப்போது சிவக்கொழுந்து மட்டன் வறுவலை அதிகமாக எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக நண்பர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது  இதில் ஆத்திரமடைந்த அபினேஷ், கார்மேகம் ஆகிய இருவரும் சேர்ந்து சிவகொழுந்துவை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிவக்கொழுந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் சிவக்கொழுந்து இறந்து விட்டதாக கருதிய இருவரும் சிவக்கொழுந்துவை அவரது மோட்டார் சைக்கிளுடன் சாலையில் போட்டுவிட்டனர்.

murder

பின்னர் அவர்கள் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்று, அவருடைய குடும்பத்தினரிடம் சிவக்கொழுந்து மோட்டார் சைக்கிளில் தானாகவே கீழே விழுந்து படுகாயத்துடன் கிடப்பதாக கூறினர். இதை கேட்டு பதறிய குடும்பத்தினர் விரைந்து சென்று பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த சிவக்கொழுந்துவை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 2-ம் தேதி சிவக்கொழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சிவக்கொழுந்துவின் பெற்றோர் தனது மகனின் சாவில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தனர். மேலும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வரை சிவக்கொழுந்து உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறினர். இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவின்பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் சிவக்கொழுந்துவுடன் மது அருந்திய அபினேஷ், கார்மேகம் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

Kadampuliyur PS

அதில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அபினேஷ், கார்மேகம் ஆகிய 2 பேரும் சேர்ந்து சிவக்கொழுந்துவை தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தும்போது மட்டன் அதிகம் சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து ஹோட்டல் ஊழியரை அடித்துக் கொலை செய்து விட்டு, விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web