குழந்தைகளுக்கு தினமும் இட்லி கொடுப்பது நல்லதா?

 
1

 தினமும் காலை உணவாக இட்லி கொடுப்பது ஆரோக்கியமான விஷயம் தான். என்ன தான் உங்கள் குழந்தைக்கு செரிமான சக்தி அதிகமாக இருந்தாலும், காலையில் எடுத்துக் கொள்ளும் திட உணவு எளிதில் ஜீரணமாகிற வகையில் இருப்பது தான் நல்லது.

காலை நேரத்தில் நாமும் கூட எண்ணெய் பொருட்களை தவிர்த்து விட வேண்டும். தவிர, பிற டிபன் வகைகளில் இல்லாத சிறப்பம்சங்கள் இட்லியில் இருக்கின்றன. இட்லி தயாரிக்க சேர்க்கப்படும் உளுந்து வளரும் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அவசியமான தேவை. எலும்புகளைப் பலப்படுத்தவும் உளுந்து பயன்படுகிறது. எண்ணெய்யில் பொரிக்கப்படாமல், ஆவியில் தயாராகிற உணவு வயிற்றையும் பதம் பார்ப்பதில்லை.

இட்லியை தொட்டுக் கொள்ள உதவும் சட்னியில் பொரிகடலையும், தேங்காயும்  சேருகின்றன. சாம்பாரில் பருப்பும் காய்கறிகளையும் சேர்க்கிறோம்.  குழந்தைகளுக்கு தேவையான மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்பு சத்து, விட்டமின்கள், தாதுச்சத்துகள் ஆகியவை இட்லி, சட்னி, சாம்பார் கலவையில் கிடைக்கிறது. அதாவது, அரிசியில் மாவுச்சத்து, உளுந்து , பருப்பில் புரதச்சத்து இருக்கிறது. தேங்காயில் கொழுப்புச்சத்து உள்ளது. காய்கறிகள் மூலம் விட்டமின்கள் தாதுசத்துக்கள் கிடைக்கின்றன. ஆக மொத்தத்தில் இட்லி நல்ல ஆரோக்கியமான உணவுதான். தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

ஆனால் முக்கியமான விஷயம், இட்லியோடு சட்னி, சாம்பர் என்று சேர்த்து தர வேண்டுமே தவிர, பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஜாம்களையோ, சர்க்கரையையோ தரக் கூடாது. இன்னும் சிலர் பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி தனியே வேகவைத்துக் கொள்கிறார்கள். பின், இந்த காய்கறிகளின் கலவையை இட்லி மாவில் கலந்து இட்லி செய்கிறார்கள். குழந்தைகள், இட்லியின் உள்ளேயும், மேலேயும் வண்ணக் கலவையில் காய்கறிகளின் டிசைன்களைப் பார்த்து ஆர்வமாக சாப்பிடுகிறார்கள்

From Around the web