புது வீட்டுக்கு வாஸ்து சாஸ்திரம்..!

புதிதாக ஒரு வீடு கட்டினாலும், வாங்கினாலும் அதற்கு வாஸ்து பார்ப்பது என்பது தற்போது வாடிக்கையாகி விட்டது. ஏனென்றால் ஒருவேளை அப்படி இல்லை என்றால், கட்டி முடித்த பின் வாஸ்துவிற்கு ஏற்றார் போல மாற்றுவது என்பது கடினம். வாஸ்து சாஸ்திரம் என்பது கட்டுமான அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட நம் நாட்டின் மிக பழமையான அறிவியலில் ஒன்றாகும்.
வீடு கட்டும் முன்னரே இடம் தேர்வு, கட்டிடத்தின் அமைப்பு முறை உள்ளிட்டவகைகளில் இருந்து வாஸ்து சாஸ்திரம் ஆரம்பமாகிறது.
வீட்டுக்கான மனை தேர்வு என்பது இங்கே முக்கியமான ஒன்றாக உள்ளது. பணப்புழக்கம், ஐஸ்வர்யம் நிலைக்க உகந்ததாக இருக்க மனையின் கிழக்கு திசையும் வடக்குத் திசையும் தாழ்வாக அமைந்திருக்க வேண்டும்.
தெற்கு பக்கமும் மேற்கு பக்கமும் உயர்வாக இருக்க வேண்டும். இதுவே நல்ல மனையின் அடையாளம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
இந்த மனையில் வீடு கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைப்பதோடு, விருத்தி கிடைக்க வழிவகை செய்யும். செல்வ வளம் பெருகும்.
அடுத்து மனையின் சந்திர ஸ்தானம், சூரிய ஸ்தானம் எது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். மனையின் தெற்கு பாகமும், மேற்கு பாகமும் இணைந்து உருவாகும் முக்கோண பகுதியே சந்திர ஸ்தானம் ஆகும். கிழக்கும், வடக்கும் இணைந்து உருவாகிற முக்கோணப் பகுதியே சூரிய ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது.
அதாவது சந்திர ஸ்தானம் உயர்ந்தும், சூரிய ஸ்தானம் சற்று தாழ்வாகவும் இருக்க வேண்டும். இப்படி இல்லாவிட்டால் தளத்தை சரி செய்வது வேண்டும். இரண்டு ஸ்தானமும் சமமாக இருந்தால் வெற்றி தோல்வி சமமாக இருக்கும். நடுப்பாகம் பள்ளமாகவும் நான்கு பக்கமும் உயர்ந்தும் இருந்தால் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்வது உத்தமம். திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களையும் துரதிர்ஷ்டத்தையும் தரும்.
பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுவது சிறப்பாக அமையும். சமையலறை, தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.
படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும்.
குளியலறை மற்றும் கழிப்பறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது.
வாஸ்து சாஸ்திரத்தில் கிழக்கு திசை முக்கியம் வாய்ந்தது. இந்த கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பவர்களின் குழந்தைகள் சூரிய பகவானின் நல்லருளால் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள்.
அதே போல் வடக்கு திசையில் முகப்பு வாசல் பகுதி கிழக்கு நோக்கி இருப்பதும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சொந்த தொழில் செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், அதிகளவு பணத்தை முதலீடாக போட்டு நிறுவனங்களை நடத்துபவர்கள் மற்ற எவ்வகையான வேலைகளில் இருந்தாலும் வடக்கு திசை நோக்கியவாறு தங்கள் இல்லங்களின் தலைவாயில்களை அமைத்து கொள்ளவது மிகுந்த பாக்கியத்தை ஏற்படுத்தும்.
வாஸ்து சாஸ்திரப்படி நம் வீட்டில் சில விஷயங்கள் அமையவில்லை என்றால், அதனை சரிப்படுத்த, வஸ்து வல்லுனர்களிடம் யோசனை கேட்டு சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் வாழ்க்கை வளம் பெறும்.